×

கொரோனா பாதிப்பால் வருவாய் இழப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைக்கட்டுகிறது தெருக்கூத்து: மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை

கலசபாக்கம்: தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தெருக்கூத்து மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது. மக்களை மகிழ்விக்கும் எங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைய மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பராம்பரியமாக நடைபெறும் திரவுபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாக்களில் தெருக்கூத்து நடைபெறுவது வழக்கம். இதில், பங்கேற்கும் கலைஞர்கள் தத்ரூபமாக கிருஷ்ணர், திரவுபதி மற்றும் பஞ்சபாண்டவர்கள் உள்ளிட்டவர்களின் வேடங்களை அணிந்து நடிப்பார்கள். குறிப்பாக வாள், தண்டாயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி கம்பீர குரலில் பாட்டு பாடி மேடையில் அதிர வைப்பார்கள். இது தெருக்கூத்தை பார்க்கும் பார்வையாளர்களை வெகுவாக கவரும்.விழா நடக்கும் நாட்களில் தினமும் இரவில் தொடங்கி விடிய விடிய நடக்கும். இதை காண சுற்றுவட்டார கிராம மக்கள் மாலையில் இருந்தே திரள்வார்கள். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விழாக்களுக்கு தடை செய்ததால் தெருக்கூத்து நாடக கலைஞர்கள் நலிவடைந்தனர்.இதுகுறித்து தெருக்கூத்து நாடக கலைஞர்கள் கூறுகையில், ‘ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே அக்னி வசந்த விழாக்கள் நடைபெறும். இதை பார்க்கும் மக்கள் விடிய விடிய கண் விழித்திருந்து மகிழ்வார்கள். ஆனால், மற்ற நாட்களில் சிறு தொழில்கள் மற்றும் கூலி வேலைகள் செய்து எங்களது குடும்பத்தை நடத்துகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிரச்னையால் கிடைத்து வந்த சொற்ப வருவாயையும் இழந்தோம். எனவே, எங்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி மாத ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுதொழில் செய்ய வங்கிக்கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர்….

The post கொரோனா பாதிப்பால் வருவாய் இழப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களைக்கட்டுகிறது தெருக்கூத்து: மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Corona ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...